• Sun. Oct 19th, 2025

தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Byமு.மு

Jan 3, 2024
கழக உடன்பிறப்புகளுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தாலும், காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.