• Sun. Oct 19th, 2025

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகள் அமைச்சர் ஆய்வு!

Byமு.மு

Jan 4, 2024

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள குடியிருப்புகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

         குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (4.1.2024) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளான வன்னியபுரம், ஜோகித் தோட்டம், வன்னியம்பதி, டாக்டர் தாமஸ் சாலை,  வாழைத் தோப்பு  ஆகிய  பகுதிகளில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தனம்  ஜோகித்தோட்டம் திட்டப்பகுதியில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ. 58.65 கோடி மதிப்பீட்டில் 13 தளங்களுடன் 416 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டப்பகுதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டப்பகுதியில் மின்சாரம், குடிநீர், மின்தூக்கிகள் மற்றம் இதர பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

             மேலும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் ரூ. 77.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 470 புதிய குடியிருப்புகளின்  கட்டுமான பணிகளையும்,  தியாகராய சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட வாழைத்தோப்பு  திட்டப்பகுதியில் ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 504 புதிய குடியிருப்புகளின்  கட்டுமான பணிகளையும். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியபுரம் திட்டப் பகுதியில் ரூ.36.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 216 புதிய குடியிருப்புகளின்  கட்டுமான பணிகளையும், வன்னியம்பதி திட்டப் பகுதியில் ரூ. 85.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 500 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

ஆய்வின் போது,   அமைச்சர் அவர்கள் “சில திட்டப்பகுதிகளின் பெயர்கள் ஜோகித்தோட்டம், தாமஸ் சாலை, வாழைத்தோப்பு  என  அழைக்கப்படுவதை   மாற்றி   மக்களுக்காக தொண்டாற்றிய பெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படும்” எனத்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர்  டாக்டர்  க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப.,  ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன்,  வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், மேற்பார்வை பொறியாளர் (பொ) செந்தாமரை கண்ணன், வாரிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.