• Sun. Oct 19th, 2025

ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்.

Byமு.மு

Jan 5, 2024
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்

தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு  அவர்கள் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (05.01.2024) சென்னை, வானகரம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில், தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி புனித யாத்திரையாக சென்று வருகின்றனர். அப்பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் ஏற்கனவே 6 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம்                       10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் சபரிமலை தேவஸ்தான அலுவலர்களிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படும்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

திருவிதாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோயிலின் செயலாளர் அவர்கள், வரலாறு காணாத அளவிற்கு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கின்ற நிலையில் மணிக்கணக்கில் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழலில்  அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிஸ்கட் பாக்கெட்டுகள் ஏற்பாடு செய்துதர கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  வழிகாட்டுதலின்படி, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்கனவே 6 இலட்சம் பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற திருக்கோயில்கள் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் 4 கண்டெய்னர் வாகனங்களில் சபரிமலைக்கு அனுப்புகின்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததில்  மகிழ்ச்சி அடைகிறோம்.

சபரிமலை தேவஸ்தானம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும்  துறையின் அமைச்சர் என்ற வகையில் என்னுடைய மகிழ்ச்சியும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

 சபரிமலையை பொறுத்தளவில் ஒரு மணி நேரத்திற்கு 3,500 பக்தர்கள் தான் தரிசனம் செய்யக்கூடிய சூழல் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்ற சூழலில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும், காவல்துறையும் இணைந்து சிறந்த முறையில் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதிகளவில்  பக்தர்கள் வருகின்ற போது அவர்களுக்கு தரிசனத்தை ஏற்பாடு செய்வதற்கு சிரமம் ஏற்படுகின்றது. அதோடு மட்டுமல்லாமல் மாலையில் தரிசனத்திற்கு செல்பவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நெய் அபிஷேகத்திற்காக இரவு தங்கி விடுகிறார்கள். அந்த பக்தர்களின் எண்ணிக்கையும் தரிசனத்திற்கு செல்லுகின்ற எண்ணிக்கையும் கணக்கிடும் போது ஒரு லட்சத்தை தாண்டுகிறது.

ஆகவே பக்தர்கள் தரிசனம் செய்வதில் சற்று சிரமம் ஏற்படுகிறது. இருந்தாலும் கேரள அரசு சாதுரியமாக திட்டமிட்டு முடிந்த அளவிற்கு பல்வேறு வசதிகளையும், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும் தொடர்ந்து ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பக்தர்கள் அதிகமான நேரத்திற்கு வரிசையில் நிற்பதால் தான் தற்போது இது போன்ற உதவிகளை பக்கத்து மாநிலமாக இருக்கின்ற நாம் சகோதரத்துவத்தோடும், நட்புணர்வோடும் நம்முடைய பக்தர்களும் அதிக அளவில் செல்கின்ற படியால் இது போன்ற உதவிகளை செய்து வருகிறோம். சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்னும் கூடுதலாக திட்டமிட்டு பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை  இருக்கின்றது.

திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.  எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எங்களுடைய இலக்கு இந்தாண்டு இறுதிக்குள் திறக்க வேண்டும் என்பதுதான்.  அங்கு குளிர்சாதன வசதி  செய்கின்ற பணிகள் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில்  கிடைத்த அனுபவத்தை கொண்டு, குத்தம்பாக்கம் முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்ற போது பயணிகளுக்கு தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ஆலோசித்து, தனியார் ஆலோசனைகளையும் பெற்று சிறந்த முறையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை இயக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இந்தாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்குண்டான நடவடிக்கைகளை மேலும் விரைவுப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் அ.சங்கர், இ.ஆ.ப., இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி, திருமதி கி. ரேணுகாதேவி, உதவி ஆணையர்கள் முத்து ரத்தினவேல், அரவிந்தன், கணேசன், செல்வராஜ், செயல் அலுவலர் கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.