• Sun. Oct 19th, 2025

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-புதிய திட்டப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Byமு.மு

Jan 8, 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-புதிய திட்டப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை வர்த்தக மையத்தில், இரண்டு நாள் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-யை தொடங்கி வைத்தார். விழாவில் தலைமையுரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் நிலவும் சிறந்த தொழில் சூழல் பற்றி எடுத்து கூறினார்.

இம்மாநாட்டில், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி, ராஜா அவர்கள் இந்நிகழ்ச்சியின் தொடக்க உரை ஆற்றினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அவர்கள் இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024 மற்றும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெளியிட்டார்.

நிறுவனங்களின் முடிஅற்ற கிட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

அதனைத் தொடர்ந்து, க்வால்காம் டிசைன் சென்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்து, கோத்ரெஜ் நிறுவனத்தின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள்

இந்நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டின் கோச்சி மாகாண ஆளுநர் ஹமாதா செய்ஜி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஆர்.தினேஷ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா கோத்ரெஜ், டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் வேணு ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பாணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்

இம்மாநாடு தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் தலைமைத்துவம், அதன் நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Leadership, Sustainability and Inclusivity) ஆகிய கருப்பொருட்களை கொண்டு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான ஒரு பிரத்யேக சந்திப்பு (Buyer Seller Meet) நடைபெற உள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு-அச்சந்திப்பில் பல நாடுகளைச் சேர்ந்த விற்பனையாளர்களுக்குமிடையேயான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன. அனுபவம் பகிர்வு உரையாடல்களும், பலதுறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளன.

தொழில் நிறுவனங்களின் அரங்குகள், பன்னாட்டு அரங்குகள், புத்தொழில்களுக்கான அரங்குகள் மற்றும் தமிழ்நாடு தொழில் சூழலமைப்பு அரங்கம் ஆகியவை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார மையமும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல் மற்றும் மனித வளம் ஆகியவற்றை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தி புதிய தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இம்மாநாடு அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் / தலைமை செயல் அலுவலர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.