• Mon. Oct 20th, 2025

உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி!

Byமு.மு

Jan 9, 2024
உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்திற்காக உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளூர் அளவிலான பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த லக்ஷ்மி பிரஜாபதியின் குடும்பம் சுடுமண் பொம்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. 12 உறுப்பினர்கள் மற்றும் சுமார் 75 பணியளார்களைக் கொண்ட சுயஉதவிக் குழுவை அமைத்து செயல்படுவது குறித்து இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது லக்ஷ்மி  பிரஜாபதி பிரதமரிடம் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக அவர் கூறினார்.   அவரிடம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பலன்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.  இதற்கு பதில் அளித்த பிரஜாபதி, இத்திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவதாகவும், பிரதமருக்கும் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு கைவினைஞருக்கும் மணல் உற்பத்திக்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய அளவிலான கண்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 

பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். கழிவறைகள், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டம், ஒரு மாவட்டம், ஒரு பொருள் உள்ளிட்டவற்றால் தம்மைச் சார்ந்தவர்கள் பலனடைந்துள்ளதாக பிரஜாபதி குறிப்பிட்டார். செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் அரசு திட்டங்கள் குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வையும் அவர் எடுத்துரைத்தார். தங்களது பகுதிக்கு வந்த மோடியின் உத்தரவாத வாகனமும் மக்களின் கவனத்தை  ஈர்த்த்தாக அவர் கூறினார்.  அத்துடன் பிரதமரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் மக்களைக் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ, தில்லி உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் தமது சுடுமண் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.  

இதையடுத்து இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வகர்மா திட்டம் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்  திட்டமாகும் என்றார்.  இது கைத்தொழில் புரியும் அனைத்து கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதாக தெரிவித்தார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து அந்தப் பகுதியில் மேலும் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் பிரதமர்,  பிரஜாபதியை வலியுறுத்தினார். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் மக்களின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.