வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் வாகனப் பயணம் புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் 02.01.2024 முதல் 10.1.2024 வரை நடைபெற்றது. இந்த நகரப் பகுதிகளுக்கான பயணத்தை 02.01.2024 அன்று புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் குருசுகுப்பத்தில் தொடங்கி வைத்தார். 10.01.2024 அன்று உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் பயணம் நிறைவடைந்தது. மொத்தம் 18 நகரப் பகுதிகளில் நடைபெற்ற பயணத்தில் சுமார் 6000 பேர் கலந்துகொண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சிய பயணத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
நகரப் பகுதிகளுக்கான 17 மத்திய அரசு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு திட்டப் பலன்களை முகாமிலேயே வழங்க வேண்டும் என்பது இந்த லட்சிய வாகன பயணத்தின் நோக்கம் ஆகும். இதன்படி புதுச்சேரி நகராட்சியில் இந்த 18 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பிரதமரின் ஸ்வநிதி, சமையல் எரிவாயு இணைப்புக்கான உஜ்வாலா திட்டம், முத்ரா கடன் உதவி திட்டம், ஆயுஷ்மான் பாரத் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சௌபாக்கியா திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் 1149 பேர் பயனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகபட்சமாக 926 பேர் பயனடைந்துள்ளனர்.
சாலையோர வியாபாரிகள் கடன் உதவி திட்டமான பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் 82 பேரும், இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கான உஜ்வாலா திட்டத்தின் கீழ் 47 பேரும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 81 பேரும், பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 12 பேரும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு நபரும் பயன் பெற்றனர்.
இந்த 18 நிகழ்ச்சிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இவற்றில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு போன்றவற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அறிகுறி உள்ளவர்களுக்கு காச நோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான காலண்டர்களும் மத்திய அரசு திட்டங்கள் குறித்த பிரசுரங்களும் இந்த நிகழ்ச்சிகளில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மக்களின் ஆர்வமான பங்கேற்பும் அலுவலர்களின் அக்கறையுடன் கூடிய பணியும் இணைந்து வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண வாகன முகாம்களை வெற்றிகரமானதாக ஆக்கியுள்ளன.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 3.1.2024 அன்று சோலை நகர் சின்னாத்தா அரசு பள்ளி, 4.1.2024 அன்று ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, 5.1.2024 அன்று முதலியார் பேட்டை, 8.1.2024 அன்று கம்பன் கலையரங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களில் கலந்து கொண்டார். 8.1.2024 அன்று கம்பன் கலையரங்க முகாமில் முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்து கொண்டார்.
சட்டமன்றத் தலைவர் ஆர் செல்வம் நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் சி.ஜெயகுமார், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சர் ஏ கே சாய் ஜெ சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, ஏ ஜான்குமார், பிரகாஷ் குமார், எஸ். ரமேஷ் , ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோர் இந்த முகாம்களில் பங்கேற்று வெற்றிக்கு வழி வகுத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி நகராட்சி ஆணையர் எஸ். சிவகுமார் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பு அதிகாரியாக மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் செயல்பட்டு இருந்தார்.