நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களை நேசபிரபு செய்தியாக்கி வந்திருக்கிறார். அது தான் அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். நேசபிரபு மீது தாக்குதல் நடத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.