• Sun. Oct 19th, 2025

பத்ம விபூஷன்-பத்ம பூஷன்-பத்மஸ்ரீ- விருது பெறுபவர்களுக்கு சசிகலா வாழ்த்து!

Byமு.மு

Jan 26, 2024
பத்ம விபூஷன்-பத்ம பூஷன்-பத்மஸ்ரீ- விருது பெறுபவர்களுக்கு சசிகலா வாழ்த்து

இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருது பெற உள்ளவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்திய குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கும், திரைப்பட நடிகர் சிரஞ்சீவி அவர்களுக்கும், பழம்பெரும் நடிகையும், நடனக்கலைஞருமான வைஜயந்திமாலா பாலி அவர்களுக்கும் மற்றும் பிரபல நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, பத்ம பூஷன் விருதினை, தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் மறைந்த பாத்திமா பீவி அவர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் அவர்களுக்கும், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கும், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கும், மருத்துவத்துறையில் நாச்சியார் அவர்களுக்கும் மற்றும் நாதஸ்வர கலைஞரான சேஷம்பட்டி சிவலிங்கம் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 30 பெண்களை உள்ளடக்கிய 132 நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.