• Sun. Oct 19th, 2025

தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டம்!. அமைச்சர் அறிவுரை..

Byமு.மு

Jan 29, 2024
தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டம்!. அமைச்சர் அறிவுரை

அரசுத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உடனே சென்று சேர்ந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைப்புப் பாலமாகச் செயல்பட  வேண்டும்.

மண்டல இணை இயக்குநர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் அறிவுரை
.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம் இன்று (29.1.2024)  மாநிலச் செய்தி நிலைய கூட்ட அரங்கத்தில்  நடை பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலும், விழாக்களிலும் வெளியிட்ட  செய்தி மக்கள் தொடர்புத் துறை தொடர்பான அறிவிப்புகளில் நிலுவையில் உள்ள  அறிவிப்புகள்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டவை, அவை  அளித்திடும் பயன்கள் குறித்தும், நிலுவையில் உள்ள அறிவிப்புகளை உடனடியாகச் செயலுக்குக் கொண்டுவருதல் குறித்தும், “தமிழரசு” மாத இதழ் சந்தாவை அதிகரித்தல் குறித்தும், கள விளம்பரம்  குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றியபோது, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று, மூன்றாண்டுகள் நிறைவுபெற உள்ள நிலையில் ஆய்வு செய்யும்போது,    நம்முடைய துறையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதும், அதுபோல தமிழரசு இதழ் மூலம் பல்வேறு மலர்களை வெளியிட்டுள்ளோம் என்பதும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

 செய்தி மக்கள் தொடர்புத் துறை அரசினுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் மக்களிடம் எடுத்துச் செல்கின்ற மகத்தான பணியைச் செய்கின்ற துறை.  சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள்,  நாட்டு முன்னேற்றத்திற்கு உழைத்து ஊக்கமளித்த உத்தமர்கள் பலருக்கும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் அரங்கங்களை நாம் பராமரித்து வருகின்றோம்.  முதலமைச்சர் அவர்களால் புதிதாக அறிவிக்கப்பட்ட சிலைகளையும் அரங்கங்களையும் உருவாக்கி வருகிறோம். 

இந்தச் சிலைகள், மணிமண்டபங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.

அரசினால் அறிவிக்கப்பட்ட  பல்வேறு திட்டங்களை உதாரணமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம்,  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம் முதலான பல திட்டங்களையும், மக்கள் அறிந்து உணர்ந்து அவற்றின் பயன்களை  அடைதல் குறித்தும் விளம்பரப் பதாகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு அவ்வப்போது விளக்கமாகத் தெரிவித்து வருகிறோம்.  செய்தி மக்கள் தொடர்புத்துறையால் மாவட்டங்களில் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள  விளம்பரப் பதாகைகளில் அத்திட்டங்களின் தகுதி மற்றும் பயன்கள் குறித்த சிறுகுறிப்பினையும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான்  பொதுமக்கள் அத்திட்டங்கள் குறித்து பயன்பெற ஏதுவாக இருக்கும்.     

நம்முடைய தமிழரசு இதழ் ஒவ்வொரு மாதமும் முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் செயலாக்கப்படுவது குறித்து உரிய படங்களுடன் விரிவாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.  அதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.  இந்த தமிழரசு இதழின் வாயிலாக அரசின் திட்டங்களை பொதுமக்கள்  மேலும் அறிந்து பயனடையும் வகையில் அதன் விற்பனை அதிகரித்திடல் வேண்டும்.  அதற்காக ஒவ்வொரு மண்டல இணை இயக்குநரும் தங்களுடைய மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அவர்களை அணுகி தமிழரசு மாத இதழ் ஆயுள் சந்தாவை  அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஆய்வுக் கூட்டத்தில்  அவ்வாறு அதிகரித்த சந்தாக்களின் விவரங்கள் மண்டல இணை இயக்குநர்களால் எடுத்துரைக்கப்பட வேண்டும். இது மிகவும் அவசியம்.

தமிழரசு ஆயுள் சந்தா இலக்கை எட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் மண்டல இணை இயக்குநர்கள் பேசி, மாவட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர்களை பேசவைத்து, ஆயுள் சந்தா எண்ணிக்கையை உயர்த்தச்செய்ய வேண்டும்.

தங்களுடைய மாவட்டங்களில் அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள இடங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியுடன்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்களை  அழைத்துச்சென்று அவற்றை விளக்கி  செய்தி இதழ்கள் மூலம் அவை குறித்த விவரங்கள் புகைப்படங்களுடன் வெளிவர மண்டல இணை இயக்குநர்கள் உரிய அறிவுரைகள்  வழங்கிட வேண்டும். 

மண்டல இணை இயக்குநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் ஆய்வு கூட்டம் நடத்தி பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அறிந்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது நடைபெற்று வரும் பணிகளின் புகைப்படங்களைப் பெற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மண்டல இணை இயக்குநர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறை தொடர்பான முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்,  மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்  முன்னேற்ற நிலையை வேகப்படுத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்,  மாவட்ட ஆட்சியர்கள் நடத்தும் கூட்டத்தில்  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களைப் பங்கேற்கச் செய்து செய்தி மக்கள் தொடர்புத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாவட்டங்களில் ஏதாவது  பிரச்சினை எழும்போது,  அதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத்துச் சென்று, பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காண வேண்டும்.  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலர்கள் அரசுக்கும்-மக்களுக்கும்  பாலமாகச்  செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை உரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  

இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர் (செய்தி),  ச.செல்வராஜ் மற்றும் மண்டல இணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.