• Tue. Oct 21st, 2025

பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்!. கே எஸ் அழகிரி..

Byமு.மு

Feb 6, 2024
பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்

மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.

குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்;ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்த மோடி தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வாதங்களைச் செய்து வருகிறார்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமராக நிகழ்த்திய உரையை பிரதமர் மோடி திரித்துப் பேசியிருக்கிறார். இந்த உரையில் பிரதமர் நேரு ‘ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் கடுமையான உழைப்பு தான். கடின உழைப்பு நமக்குப் புதிதல்ல, இதற்கு எதிரான சோம்பல் நமது இயல்பு அல்ல. அறிவாலும், கடின உழைப்பாலும் நாமும் முன்னேறலாம். உழைப்பில்லாமல் உயர்வில்லை” என்று பேசியதைத் திரித்துப் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல.

குண்டூசி கூட தயாரிக்க முடியாத அவலநிலையிலிருந்த இந்தியாவில் 1947 இல் பிரதமராக பதவியேற்றார். 17 ஆண்டுக் காலத்தில் ஒருநாளைக்கு காலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்த பண்டித நேரு மீது இத்தகைய கடுமையான விமர்சனத்தை மேற்கொள்வது மோடியின் கல் நெஞ்சத்தையே காட்டுகிறது.

தொழிற்சாலைகளை பொதுத்துறையில் துவங்கினார். ரூர்கேலா, பிலாய், துர்காபூர் ஆகிய இடங்களில் உருக்கு ஆலைகளை நிறுவினார். நேரு வளர்த்த பொதுத்துறையை இன்றைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து பிரதமர் மோடி அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் தொடங்கிய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியைக் காக்க 1951 இல் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தவர். தீண்டாமை குற்றச் சட்டம், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியவர். வெளியுறவுக் கொள்கையில் வல்லரசுகளுக்கு எதிராக அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவர்.

அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார் மோடி. இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் விண்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர்.இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்க மாட்டார்கள்.

1947 ஆகஸ்ட் 15, ஜனவரி 26, 1950 ஆகிய இரு நாட்களை தவிர, தொடர்ந்து 22 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.

மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்கிறார்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.