• Tue. Oct 21st, 2025

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை இணைய தளங்கள் மூலம் விற்பனை.

Byமு.மு

Feb 6, 2024
கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் விற்பனை செய்கிறது

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்கிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பாக உறுப்பிரன் ஏகேபி சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏலதாரர்கள் நடைமுறையில் உள்ள சந்தை விகிதத்தின் அடிப்படையில் தங்கள் சலுகை விலையை மேற்கோள் காட்டுவதாக தெரிவித்தார்.

விலை ஆதரவுத் திட்ட வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் ஒட்டுமொத்த அளவு, அந்த குறிப்பிட்ட பருவத்தில் பொருளின் உண்மையான உற்பத்தியில் 25 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

2022 கொள்முதல் பருவத்தில், அனுமதிக்கப்பட்ட 50,000 மெட்ரிக் டன் அரவை கொப்பரையில், 40,644.85 மெட்ரிக் டன் அரைவை கொப்பரையை குவிண்டாலுக்கு ரூ.10,590 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் கொள்முதல் செய்ததாக அவர் தெரிவித்தார். இதனால் தமிழ்நாட்டில் 18,782 விவசாயிகள் பயனடைந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், 2023-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில், அனுமதிக்கப்பட்ட அளவான 88,000 மெட்ரிக் டன்களில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் 79,003.03 மெட்ரிக் டன் அரவை கொப்பரையை குவிண்டாலுக்கு ரூ.10,860 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்தது என்றும் இதனால் தமிழ்நாட்டில் 47,025 விவசாயிகள் பயனடைந்தனர் எனவும் அர்ஜூன் முண்டா கூறினார்.