• Sun. Oct 19th, 2025

சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Byமு.மு

Dec 13, 2023

6 கிராம மக்களுக்கு சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

முகத்துவாரம், என்பதுதான் வாழ்வாதாரம். முகத்துவாரம் தான் மீனவர்களுக்கு வாழ்வாதாரம். அதேபோல முகத்துவாரத்தால் மீன்கள் இனவிருத்தி அடைந்து அதன் மூலம் கடலுக்குச் சென்று மீன் உற்பத்தி அதிகமாகும். அதனைச் சார்ந்த மீனவ கிராமங்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் கிடைக்கும். பொதுவாக முகத்துவாரத்தை மீன் உற்பத்தி மையம் என்று சொல்வார்கள்.

மகப்பேறு மருத்துவமனை எப்படி உள்ளதோ அப்படிதான் இதுவும். இதுபோல கடலில் உள்ள மீன்களுக்கும்,மீன்களை நம்பியுள்ள மீனவர்களுக்கும் முகத்துவாரம் என்பது வாழ்வு அளிக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த விடியா அரசு முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகக் கச்சா எண்ணைக் கலந்துள்ளது. ஆணையம் சிபிசிஎல்-ன் ஒரு மனித தவறு, இதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதில் சிபிசிஎல்தான் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் ஆணையத்தில் தெரிவித்திருக்கும் நிலையில் தட்டிக் கழிக்கும் வேலையை அரசு செய்யக்கூடாது. அரசைத்தான் மக்கள் முதலில் எதிர்பார்ப்பார்கள். அரசு சிபிசிஎல்லில் வாதாடி அதன் அடிப்படையில் இவர்களுக்கு நிவாரணத்தை பெற்று தரவேண்டும். அரசு வெள்ளத்தைத் தடுக்க தவறியதன் காரணமாக 6 ஆயிரம் அளித்தாலும்கூட கூடுதலாக நிவாரணங்களை வழங்க வேண்டும்.

எங்கள் ஆட்சியில் ஒரு கப்பலில் எண்ணை கசிவு ஏற்பட்டபோது நாங்கள் அதனைத் தட்டிக் கழிக்கவில்லையே. கப்பல் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தோம். 200 கோடியில் முதல் தவணையாக 100 கோடி அளித்தார்கள். நான் அமைச்சராக இருந்தபோது அதனை அனைத்து கிராமங்களுக்கும் அளித்தோம். அதன் தொடர்சியாக தற்போது 100 கோடி வந்தது. அதனையும் அளித்தார்கள். கப்பல் நிறுவனம் அளித்துவிட்டது என்று நாங்கள் அளிக்காமல் இல்லையே. மீனவர் கூட்டுறவுச் சங்கம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் பணத்தை அளித்தோம். பழவேற்காடு முதல் மரக்காணம் வரை கணக்கெடுப்பு எடுக்கவேண்டும். குறிப்பாக முகத்துவாரத்தை ஒட்டியுள்ள 6 கிராம மக்களுடைய படகுகள் போய்விட்டது. ஏற்கனவே 30 ம் தேதியிலிருந்து தொழிலுக்குப் போகவில்லை.தற்போது அவர்களின் கப்பலுக்குள் கச்சா எண்ணைப் போய்விட்டது. அதனைச் சுத்தம் செய்வதற்கு ஒரு நிவாரணத்தை வழங்கவேண்டும். அனைவருக்கும் வலை போய்விட்டது. இந்த நிலையில் படகுகளை எடுத்துச்சென்றால் அது தீ பிடிக்கும் நிலை உள்ளது.

ஏற்கனவே அம்மா ஆட்சிக் காலத்தில் தெர்மல் பிளாண்ட் கட்டும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வேலை அளித்தோம். சிபிசிஎல் செய்த தவற்றுக்கு இந்த 6 கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். நிவாரணம் அளிக்க வேண்டும். படகுகளைச் சரி செய்வதற்கான பணத்தை அளிக்கவேண்டும். முதலில் எண்ணெய்களை மொத்தமாக எடுக்கவேண்டும். ஏன் என்றால் இந்த 6 கிராம மக்களுக்குச் சுவாச பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் அந்த கச்சா எண்ணெய்களைப் போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும். கற்காலத்தில் இருப்பது போல வாளி மூலம் எடுத்து வருகிறார்கள். எப்படிப்பட்ட கோமாளித்தனமான அரசு என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஐஐடி மூலம் ஆலோசனை பெற்று உடனடியாக முகத்துவாரத்தைச் சரி செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது வந்துள்ள மத்தியக் குழு மக்களைச் சந்திக்கவே இல்லை. மக்களைச் சந்தித்தால்தானே என்ன பிரச்சனை என்பது தெரியும். இந்த விளம்பர அரசு போட்டோக்களை காண்பித்துவிட்டது. இதனைப் பார்த்த மத்தியக் குழு இவர்கள் நன்றாகச் செயல்பட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

அவ்வளவுதான். அந்த குழு மக்களைச் சந்திக்கவிடாமல் காவல்துறை மூலம் தடுக்கப் பட்டார்கள். அப்போதுதான் உண்மை நிலை அறிந்து நிதி அதிகம் கிடைக்கும். ஆனால் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று காவல்துறையை வைத்து மக்களைத் தடுத்துவிட்டு, இவர்கள் வெறும் புகைப்படத்தை மட்டும் காட்டியுள்ளார். அவர்களும் நன்றாகச் செயல்பட்டுள்ளார்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களைச் சந்திக்கும் இயக்கம் கழகம் தான். அமைச்சர்கள் இங்கு எங்கே வந்தார்கள். ஆனால் களத்தில் மக்களோடு மக்களாக இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆலோசனையின் படி மீட்புப்பணி, நிவாரணப்பணிகளை செய்தோம். கழக ஆட்சியில் மழை வெள்ளத்தின் போது நாங்கள் மீனவர்களைப் பயன்படுத்தினோம். மக்கள் நலன் குறித்து இந்த அரசு கண்டுகொள்ளாமல் வஞ்சித்துள்ளது. இந்த அரசைப் பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் அப்பன் வீட்டுப் பணத்திலா பேனா சிலை வைக்கப் போகிறீர்கள். உங்கள் அப்பன் வீட்டுப் பணத்திலா 42 கோடி வாகனம் பந்தயத்திற்குச் செலவு செய்கிறீர்கள். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

உங்கள் அப்பன் வீட்டு பணத்தில் நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை. எங்கள் வரிப் பணத்தில்தான் கேட்கிறோம். முதலில் நீங்கள் யோக்கியமாக இருங்கள். 38 எம்பிக்கள் உள்ளீர்கள்.தற்போது பாராளுமன்றம் கூடியுள்ளது. அங்கு இந்த பிரச்சனையைத் தெரிவித்து அதிக அளவில் நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். அனைத்து இடங்களிலும் இந்த விடியா அரசு ரேஷன் அரிசியை அளித்துள்ளார்கள். இதனை மக்கள் அவர்களின் முகத்தில் வீசியுள்ளார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.