• Sun. Oct 19th, 2025

சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழா!. மத்திய அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.

Byமு.மு

Feb 12, 2024
சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழா

நாடு முழுவதும் நடைபெற்ற 12வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ நாராயணசாமி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய ஆயுதக் காவல் படைகள், இந்தியக் கடலோரக் காவல் படை, பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் துறை, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த 191 பேருக்குப் பணி நியமன ஆணைள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி, முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது என்றார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைவாய்ப்பு விழாவைக் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார் என்றும், இன்று 12 வது நிகழ்ச்சி நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டிலுள்ள ஏழைகள், இளைஞர்கள், மகளிர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் என அனைவரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இளைஞர்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும்  ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராக சமுதாயத்தில் உயர வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், நாட்டிலுள்ள கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின்   திறமையை உலகறியச் செய்யவும் முடியும் என்று அமைச்சர் கூறினார்.

புதிதாகப் பணி நியமன ஆணைகள் பெறும் இளைஞர்கள் கர்மயோகி தளத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற தங்களுடைய  பணியை சிறப்பாக செய்யுமாறு இவர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.