• Sun. Oct 19th, 2025

ராணுவ தலைமைத் தளபதி அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார்.

Byமு.மு

Feb 12, 2024
ராணுவ தலைமை தளபதி அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார்

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 பிப்ரவரி 13 முதல் 16 வரை அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உத்தி சார்ந்த கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அப்போது, அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி, ஜெனரல் ராண்டி ஜார்ஜ்,  பிற உயர் ராணுவத் தலைவர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஜெனரல் மனோஜ் பாண்டே பங்கேற்க உள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் பங்கேற்பு, ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் உள்ள அறியப்படாத ராணுவ வீரர்களின் கல்லறையில் மலர் வளையம் வைத்தல், பென்டகனைப் பார்வையிடுதல் ஆகியவையும் அவருடைய சுற்றுப்பயணத்தில் அடங்கும்.

“இந்திய ராணுவத்தில் மாற்றம்,” “உலகளாவிய அச்சுறுத்தல் பற்றிய கருத்து,” “ராணுவத்தில் ஏற்படக் கூடிய மாற்றம் -2030/2040,” “மனித வளத்திற்கான சவால்கள்,” “எதிர்கால ராணுவப்படை மேம்பாடு, நவீனமயமாக்கல்”, “இணை தயாரிப்பு, கூட்டு மேம்பாட்டு முயற்சிகள்” போன்ற முக்கியமான தலைப்புகளில் கருத்துக்கள் இப்பயணத்தில் பரிமாறிக் கொள்ளப்படும்.