• Sun. Oct 19th, 2025

சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய அரசின் பணி நியமன ஆணை!. மத்திய அமைச்சர் ஷோபா கரன்ட்லஜே வழங்கினார்.

Byமு.மு

Feb 12, 2024
சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய அரசின் பணி நியமன ஆணை

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகேயுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில்  நடைபெற்ற  வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர்  ஷோபா கரன்ட்லஜே சிறப்பு விருந்தினராகக் கலந்து 138 பேருக்கு  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இன்றைய நிகழ்வில் அஞ்சல்துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார். இந்த வேலைவாய்ப்பு திருவிழா மூலம் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஓராண்டாக இந்த வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றும் பயணத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், மத்திய அரசின் பணிகளில் சேரும் இளைஞர்கள் தங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

நாம் இன்றைய தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தும் போது உலகின் முன்னணி நாடாக இந்தியா வளர முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவி்த்தார். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், 30 ஆயிரம் பெண்களுக்கு ட்ரோன்கள் மூலம் விதை தூவல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடவாள கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.