இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி நேற்று (13 பிப்ரவரி 2024) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
விஞ்ஞானி மற்றும் பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை இயக்குநர் யுஎஸ்பி யாதவ் வரவேற்றார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் முக்கியத்துவம் மற்றும் அமலாக்கம் குறித்து விஞ்ஞானி மற்றும் தென் மண்டல ஆய்வகத் தலைவர் மீனாட்சி கணேசன் விளக்கினார்.

தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, தர நிர்ணயங்களை அமல்படுத்துவது, ஒழுங்குபடுத்துதல், மேம்பட்ட தரக் கட்டுப்பாட்டுக்காக தொழில்துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் நுகர்வோரின் தேவைகளை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை கண்டறிதல் ஆகியவை குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிஐஎஸ் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. இந்திய தயாரிப்புகள் மீதான நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துவது மற்றும் சந்தை போட்டித்தன்மையை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது, தொழில்துறை சங்கங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி கலந்துரையாடினார். தரப்படுத்தலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.