• Sun. Oct 19th, 2025

அரசு மின் சந்தை தளத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி விற்பனை..

Byமு.மு

Feb 14, 2024
அரசு மின் சந்தை தளத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி விற்பனை

அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் மூலம் மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில் ரூ. 1 லட்சம் கோடி வணிகத்தை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மேற்கொண்டு வியக்கத்தக்க சாதனையைச் செய்துள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பொதுப் பொருட்களை கொள்முதல் செய்வது முதல் ஏவுகணை அமைப்புகள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு கொள்முதல் வரை, அரசு மின்  சந்தை தளம் 5.47 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களை கையாண்டுள்ளது.

இந்த மிகப்பெரிய எண்ணிக்கையைத் தாண்டிய முதல் மத்திய அமைச்சகம் பாதுகாப்புத்துறை அமைச்சகமாகும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் முக்கிய உந்துசக்தியாக இது அமைந்துள்ளது என்று அரசு மின்சந்தை தளத்தின் தலைமை  செயல் அதிகாரி திரு பி.கே.சிங் கூறியுள்ளார்.

மொத்த ஆர்டர்களில் 50.7 சதவீதம் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் பொருளாதாரத்தை தற்சார்பை நோக்கிக் கொண்டு செல்கிறது.

அரசு மின் சந்தை தொடங்கப்பட்டதிலிருந்தே, பாதுகாப்பு அமைச்சகம் இதை திறம்பட பயன்படுத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், லே-லடாக் மற்றும் பல்வேறு தீவு பிரதேசங்கள் போன்ற தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 19,800 வாங்குபவர்கள் இந்தத் தளத்தின் மீது வைத்துள்ள மகத்தான நம்பிக்கை இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மேலும், அரசு மின்னணு சந்தை தளத்தில் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தியது கொள்முதலை எளிதாக்கியது மட்டுமின்றி, விற்பனையையும் எளிதாக்கி, கொள்முதல் நிலப்பரப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.