• Sat. Oct 18th, 2025

பெசன்ட் நகர், மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Byமு.மு

Feb 15, 2024
பெசன்ட் நகர், மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (15.02.2024) சென்னை, பெசன்ட் நகர், அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

2023 – 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக்  கோரிக்கையில் “சென்னை, பெசன்ட்நகர், அருள்மிகு அஷ்ட லெட்சுமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் உபயதாரர்கள் நிதியின் மூலம் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் ஆஞ்சநேயர் சன்னதி, தன்வந்திரி சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளும், ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் குருவாயூரப்பன் சன்னதி மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்து வர்ணம் தீட்டும் பணிகள்,  ரூ.33 லட்சம் மதிப்பீட்டில்  திருக்கோயிலின் அனைத்து மரக்கதவுகளை பழுதுபார்த்து புதுப்பித்தல்,  ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் தரைத்தளம் அமைத்தல், ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில்  க்யூ வரிசை அமைத்தல்,  ரூ.11.40 லட்சம் மதிப்பீட்டில் அஷ்டாங்க விமானம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் மகாமண்டபம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.28.19 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் முழுவதும் மின் இணைப்புகள் பழுதுபார்த்து புதுப்பித்தல் என 9 பணிகள் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் கி. ரேணுகாதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர் கயல்விழி ஜெயக்குமார், திருக்கோயில் செயல் அலுவலர் கோ.முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.