• Sun. Oct 19th, 2025

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது!. முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

Byமு.மு

Feb 22, 2024
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. இதில் விருப்ப மனு பெற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்கான விருப்ப மனுவை பெறுவதற்காக முதல் நாளே எழுச்சியோடு வந்திருக்கும் இந்த நிகழ்வை பார்க்கும் போதும், கள அளவில் அதிமுக தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போதும், பொது மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அதிருப்தி இருப்பதாலும்,அதிமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று பார்க்க முடிகிறது என்றார்.

எழுச்சியோடு அதிமுக கழக சகோதரர்களும், மற்றவர்களும் அந்தந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார் மகன் விருப்ப மனு பெற்றது குறித்த கேள்விக்கு,
திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி. அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என ஒரே குடும்பத்தின் தலைமையில் வருகிறது. இங்கு ( அதிமுகவில் ) அப்படி யாரும் இல்லை.கொடி பிடிக்கும் தொண்டனுக்கு கூட பதவியை கொடுத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி அதிமுக தான். இங்கு வாரிசு அரசியல் கிடையாது.

உழைப்பவரே உயர்ந்தவர் என்பது தான் எம்ஜிஆரின் தாரக மந்திரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். படிவம் ஏ மற்றும் பி இல் பொதுச் செயலாளர் கையெழுத்து போட வேண்டும். பொதுச் செயலாளர் தன்னுடைய மகனுக்கு அந்த ஏ&பி படிவத்தை கையெழுத்து போட்டு கொடுத்தால் அது வாரிசு அரசியல். பொதுச் செயலாளர் அந்த மாதிரி சொந்தக்காரர்கள் யாருக்கும் கொடுக்கவில்லை.

ஜெயவர்தனின் அரசியலை எடுத்துக் கொண்டால் அது வாரிசு அரசியலில் வராது. 2014 ல் ஏ&பி படிவத்தில் இதய தெய்வம் அம்மா தான் கையெழுத்து போட்டார். அப்போது அம்மா தான் பொதுச் செயலாளர். அவர் கையெழுத்து போட்டதால் 2014 ல் தேர்தலில் நின்றார். 2019 ல் 8 சதவீதம் தான் தென் சென்னையில் ஓட்டு வித்தியாசமே. அந்த அளவிற்கு தான் தோல்வி இருந்தது. விடாமுயற்சியில் கழக பணி ஆற்றி வரும் ஜெயவர்த்தன் போட்டியிட சீட் கேட்பது எப்படி வாரிசு அரசியல் ஆகும்?

திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பதிநிதி என்று மக்களாட்சியை காலில் போட்டு விட்டு, மன்னராட்சி நடத்துகின்றனர். இன்றைக்கு அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு சேவை செய்வதும், அடுத்ததாக இன்பதிநிதிக்கு சேவை செய்வதுமாக ( மானங்கெட்ட பொழப்பு என்று சொல்ல முடியாது) இருப்பதை தான் ஊரே எண்ணி நகையாடுகிறது.
2026 ல் நாங்கள் ஆட்சி அமைப்போம். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார். திமுகவுக்கு இனிமேல் நிரந்தர வன வாசம் தான் என்றும் கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசியவர், எங்கள் இயக்கத்தில் பற்றுள்ளவர்கள் எந்த நிலையிலும் தடம் மாற மாட்டார்கள் என்பதை உறுதியாக சொல்கிறேன். அதே போல் அண்ணாமலை பிற இயக்கத்தில் இருந்து வலைவீசி ஆள் பிடிக்கும் வேலையை பார்க்கிறார்(பிள்ளை பிடிக்கும் வேலை மாதிரி) என்று சுட்டிக் காட்டியவர், அவர் தாடி எல்லாம் பார்க்கும் போது மாயாண்டி, பூச்சாண்டி மாதிரி தான் இருக்கிறது. வந்துட்டாரா பூச்சாண்டி என்ற தோற்றம் தான் இருக்கிறது. பூச்சாண்டி, மாயாண்டி பார்த்து மீதி கட்சிகள் பயப்படலாம். நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

கூவத்தூர் விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி ராஜூ கூறிய கருத்து சர்ச்சையாகி வருவது குறித்து பேசியவர், ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இழிவுபடுத்த கூடாது. நடிகை திரிஷா எவ்வளவு மன உளைச்சலுடன் அந்த ( எக்ஸ்) பதிவை போட்டிருப்பார். அதை கேட்கும் போது அருவருக்கத்தக்கதாக தான் இருந்தது. இதை சும்மா விட மாட்டேன்.அதே போல் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் தாருமாறாக பேசி இருக்கிறார். பெண்மையை இழிவுபடுத்தியும், பொதுச் செயலாளரை இழிவு படுத்தியும், இத்தகைய கேவலமான நடக்காத விஷயங்களை பேசி கட்சிக்கு களங்கத்தையும் த்ரிஷாவை இழிவுபடுத்தியும் கூறிய கருத்துக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,அதை கட்சி தான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.

கூட்டணி நன்றாக தான் இருக்கிறது, ஒன்றும் பிரச்சினை இல்லை.இன்னும் ஒரு மாதம் காலம் இருக்கிறது.‌ கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று பொதுச் செயலாளர் சொல்லி இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எங்கள் தலைமையில் சில கட்சிகள் சேரும் எனவும் கூறினார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை மட்டுமல்ல, ஆசிரியர், அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தும் போராடுகிறார்கள்.

விடியா அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லுங்கள். 98 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை எங்கே நிறைவேற்றினீர்கள்? 95 சதவீதம் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

விவசாய பட்ஜெட்டை சுட்டி காட்டி பேசியவர், நெல்‌ மற்றும் கரும்புக்கு ஆதார விலையை உயர்த்தவில்லை. தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் கொடுப்பதாக சொன்னீங்க. எங்கே கொடுத்தீங்க. இந்த ஆட்சி வந்ததும் Economic Expert Commity போட்டாங்க. அதன்படி பொருளாதாரம் உயரும் என்று சொன்னதாகவும், பொருளாதாரம் உயரும் அளவுக்கு, வரி போடாமல் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை. அந்த குழு என்ன சொன்னார்கள்?

வெறும் 30 ஆயிரம் கோடி வருவாய் அதிகப்படுத்தியது அதுவும் சொத்து வரி, வீட்டு வரி, மின்கட்டண உயர்வு, டாஸ்மாக விலை உயர்வு போன்றவற்றில் தான் இந்த பணம் வந்ததாகவும், மக்கள் விரோத போக்கை கடைபிடித்து இந்த அறிவு கெட்ட அரசு இதை செய்து விட்டதால் இன்றைக்கு மக்கள் கஷ்டப்படுவதாகவும் கூறினார்.
மக்களைப் பாதிக்காத வகையில் பொருளாதாரத்தை ஏற்றினால் புத்திசாலி அரசு என்று சொல்லலாம். ஆனால், இது அறிவில்லாத அரசு என்று விமர்சித்தார்.

1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை.2 லட்சம் கோடி வரி வருவாயை அதிகப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.எப்படி,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பஸ் கட்டணம், மின்சாரம், பால் விலை, டாஸ்மாக் விலை போன்றவற்றை உயர்த்துவார்கள்.தேர்தலுக்கு பிறகு இன்னும் வரி சுமைகளை அதிகரிக்கும் வகையிலேயே இந்த பட்ஜெட்டின் தாக்கம் இருக்கிறது.
ஒன்றுக்குமே உதவாத இந்த பட்ஜெட்டை ஒதிய மரம் & கருவேல மரமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார்.

இந்த அரசு பல பொய் வழக்குகளை போடுவதாக பேசிய ஜெயக்குமார், அன்றைக்கு உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் தொகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஒருவரை கையும் களவுமாக பிடித்து கொடுத்தோம். இதுவரை அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் மீது 5 க்கும் மேற்பட்ட வழக்குகள். இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல். எனக்கான அடிப்படை உரிமை கூட மீறப்பட்டிருக்கிறது.இந்த ஆட்சிக்கு எதிராக மக்களோ காவல்துறையோ செயல்பட்டால் மனித உரிமைகள் ஆணையத்தில் எப்படி நீதி கிடைக்கும்?மனித உரிமைக்காக தான் ஆணையம் அமைப்பட்டிருக்கிறது.அதன் நோக்கத்தையே சிதைக்கின்ற நிலை தான் இன்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.