• Sun. Oct 19th, 2025

உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள் – முதல்வர் ஸ்டாலின்

Byமு.மு

Feb 23, 2024
உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் சிற்பி கலைஞர் கருணாநிதி தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் ஐடி துறை உருவாக்கப்பட்டது. அவரது காலம் எப்படி ஐடி துறைக்கு பொற்காலமாக இருந்ததோ, அதே போல் திராவிட மாடல் ஆட்சி காலம் அனைவருக்குமான பொற்கால ஆட்சியாக இருக்கும்.

இந்த துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை எதற்காக நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றினேன் என்றால், அவர் நிதித்துறையில் செய்த பல்வேறு மாற்றங்கள் மூலம் நிதித்துறை வளர்ந்தது போல தகவல் தொழில்நுட்ப துறையும் வளரவேண்டும் என்று தான் அவர் இந்த துறைக்கு மாற்றினேன்.

எனக்கு இரண்டு குறிக்கோள்கள் உள்ளன. ஒன்று தமிழக பொருளாதாரம் 1 டிரில்லியன் அளவுக்கு உயர வேண்டும். அதே போல உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள்.  வளர்ச்சி என்பது வெறும் எண்களை மட்டும் வைத்து கூறப்படுவது இல்லை. அது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது பற்றியது.

ஐடி துறை வளர்ச்சி என்பது நம் கண்முண்ணே கண்டு வருகிறோம். செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டை தமிழகத்தில் நடத்தி முடித்துள்ளோம்.  தமிழகத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை சென்றாண்டு முதல் செயல்படுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 32 ஆயிரம் இசேவை மையம் உள்ளது. அதில், 25 ஆயிரம் இசேவை மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.  சென்னையில் 1000 இடங்களில் wifi ஸ்பாட்கள் உள்ளன. சென்னையில் புதியதாக ஐடி துறை கம்பெனிகள் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. கோவையில் தற்போது அதிக அளவில் ஐடி கம்பெனிகள் உருவாகி வருகின்றன.

புதியதாக நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு கடன் வழங்க 5 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டள்ளது.  கோவையில் 1100 கோடி ரூபாயில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. மதுரையில் 340 கோடி ரூபாய் செலவிலும், திருச்சியிலும் புதிய ஐடி பார்க் அமைய உள்ளது என Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெற உள்ளது.