• Thu. Dec 4th, 2025

தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க நாணயம் மற்றும் பாரட்டு சான்றிதழ்!. அமைச்சர் சா.சி.சிவசங்கர்.

Byமு.மு

Feb 26, 2024
தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க நாணயம் மற்றும் பாரட்டு சான்றிதழ்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, இன்று (26.02.2024) மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 04 கிராம் தங்க நாணயமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, இன்று (26.02.2024) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஒரு ஓட்டுநருக்கு 04 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் உடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.

இவ்விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.