• Sun. Oct 19th, 2025

தமிழகத்திற்கு பணத்தை அள்ளி கொடுத்த மஹிந்திரா…

Byமு.மு

Dec 14, 2023

வெள்ளத்தில் பாதித்த தமிழகத்தை மீட்டெடுக்க பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பெரும் தொகையை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின்கீழ் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீளும் விதமாக சில தனியர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமிழகத்திற்கு நிதி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra)-வும் தமிழகத்திற்கு மாபெரும் தொகையை நிதியாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலினைச் சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் வேலுசாமி, ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார். மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த காசோலை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் உடனிருந்தார். இவர்களுடன், மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ஹூண்டாய் நிறுவனமும் சமீபத்தில் தமிழகத்திற்கு நிதியுதவியை வழங்கியது. அது ரூ. 3 கோடியையே அது நிதியாக வழங்கியது. இதுமட்டுமின்றி, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெட்-சீட், பாய், தார்ப்பாய் சீட்டு மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக மெடிக்கல் கேம்ப்களையும் அது நடத்தியது.

இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் அதன் நிதி உதவியை தமிழகத்திற்கு செய்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் சிறப்பு ரோடு சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் மழை நீரால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு சிறப்பு சர்வீஸ் திட்டத்தையும் அது அறிவித்து இறுக்கின்றது. சர்வீஸுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளையும் அது அறிவித்து இருக்கின்றது. ஆனால், தள்ளுபடி திட்டம் வருகின்ற 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரே மாதத்தில் 40 ஆயிரம் வாகனங்களை விற்கும் அளவிற்கு அந்த பிராண்டு சூப்பரான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த நவம்பர் மாதத்திலேயே இந்த மாபெரும் விற்பனை சாதனையை அந்த கார் செய்திருந்தது. கார்களின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே இதுவாகும். சொல்லப்போனால், ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் 70 ஆயிரத்து 576 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களாக எக்ஸ்யூவி700 (XUV700), தார் (Thar), ஸ்கார்பியோ (Scorpio) மற்றும் பொலிரோ (Bolero) உள்ளிட்டவை இருக்கின்றன. குறிப்பாக, ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 மற்றும் தார் ஆகியவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பானது அபரிதமானதாக இருக்கின்றது. இதனால்தான் இந்த நிறுவனத்தை பார்த்து போட்டி நிறுவனங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றன.