தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.12.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு ரூ.21.40 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை கடனுதவியாக வழங்கினார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாநில முகமையாக செயல்பட்டு வருகிறது. இக்கழகமானது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.
2023-24 ஆம் நிதியாண்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக,
7 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும், மீதமுள்ள 93 பயனாளிகளுக்கு இன்றையதினமே சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் அன்னை தெரசா வளாக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்கு கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இக்கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் திரு.கா.காஜா முகைதீன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு. வா. சம்பத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.