• Mon. Oct 20th, 2025

ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது முதலமைச்சர் ஆணை!.

Byமு.மு

Mar 7, 2024
ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது முதலமைச்சர் ஆணை

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நகர்ப்புர மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் “நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி-தமிழ்நாடு” எனும் திட்டம் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தின் மூன்றாம் நிலையை செயலாக்கம் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை(நிலை) எண்.95, நாள் 12.07.2023-ல் ஆணைகள் வெளியிடப்பட்டன. நகர்ப்புர உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.4,333.75 கோடி ஆகும்.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதியுதவி-தமிழ்நாடு திட்டத்தின் மூன்றாம் நிலையின் கீழ் மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாநகராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு, மறைமலைநகர், பழனி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை (UGSS) செயல்படுத்தவும், திருநெல்வேலி மாநகராட்சியில் நாளொன்றுக்கு 56 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், மொத்தம் ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் மூலம், இந்நகர்ப்புர உள்ளாட்சிகளில் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கும், சுத்திகரிப்பதற்கும் ஏதுவாக அமைவதோடு, இந்நகரங்களின் நீடித்த சுகாதாரத்திற்கும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், இந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்யவும் வழிவகுக்கும்.