• Mon. Oct 20th, 2025

அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகள்-ஓ.பன்னீர்செல்வம்

Byமு.மு

Mar 7, 2024
அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகள்-ஓ.பன்னீர்செல்வம்

மகளிர் பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும், அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பினை அதிகரிக்கவும், அதிகாரப் பகிர்வினை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒவ்வோராண்டும் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இனிய நாளினை முன்னிட்டு, அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டினுடைய சமூக வளர்ச்சிக்கு மகளிர் முக்கிய காரணியாக விளங்குகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மகளிருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தினை கணக்கிடும் அளவுகோலாக திகழ்கிறது.

இதனை நன்கு உணர்ந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம்; இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம்; இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்; இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்ச திட்டம்; சிறந்த பெண்மணிக்கு “அவ்வையார் விருது” என மகளிருக்கான பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

மகளிர் இன்று அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பணியாற்றி வருகின்றார்கள். இருப்பினும், மகளிருக்கான பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையேயும் நிலவுகிறது.

இந்த இனிய நாளில், மகளிரின் கோரிக்கைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து மகளிருக்கும் எனது நெஞ்சார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.