• Mon. Oct 20th, 2025

உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Byமு.மு

Mar 13, 2024
உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமானப் பணியின்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் சிக்கிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு.ரிஸ்வான் (வயது 22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு.சகிர் (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.