• Sun. Oct 19th, 2025

2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை!.

Byமு.மு

Mar 20, 2024
2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை ஸ்டாலின் கைகளில் கொடுத்தார். அதன்பின்னர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின், “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. அதன் அடிப்படையில் தான் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது திமுக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது.

2014ல் ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை பாழ்படுத்திவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தும் சிறுக, சிறுக சிதைக்கப்பட்டுள்ளன. கையில் கிடைத்த வாய்ப்பை பாஜக நழுவவிட்டது. இனியும் பாஜக ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. மக்கள் ஆட்சியை செம்மைப்படுத்தும் ஆட்சியாக புதிய ஆட்சி அமைய வேண்டும். அத்தகைய ஆட்சி அமைந்த பின்னர் தமிழக மக்களுக்கு செய்யக் கூடியவற்றை இந்தத் தேர்தல் அறிக்கையில் விளக்கியுள்ளோம்.

64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். தங்கை கனிமொழி தலைமையிலான குழு மிகச் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கும், குழுவினருக்கு தலைமைக் கழகம் சார்பில் நன்றி. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்களை மட்டும் நான் இங்கு வாசிக்கிறேன்” என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் அரசமைப்பு திருத்தப்படும்

ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்

* உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைக்கப்படும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும்

அனைத்து மாநில மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்

தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட வேலைநாட்கள் 150 ஆகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும்

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்

ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

எல்பிஐ சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்

ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படும்

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.