• Sun. Oct 19th, 2025

தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!.

Byமு.மு

Apr 5, 2024
தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு பழையபாலத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர்.துளசி கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் இருந்து 3 வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனை கட்டடம், ஜவுளி வணிக கட்டிடம், ஓடை சீரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டிலுள்ள சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, நெல்லை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பான புகாரையடுத்து வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.