• Sun. Oct 19th, 2025

உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கு, என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து…சசிகலா

Byமு.மு

Apr 13, 2024
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்-சசிகலா

புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப்புத்தாண்டில், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியை பேசுகின்ற தமிழ் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து, அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் நிலைநாட்டியதை இத்தருணத்தில் எண்ணி மகிழ்கிறேன்.

‘பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்!’ – என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ‘அம்மா இலக்கிய விருது’ என்ற சிறப்புமிக்க விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்க செய்ததை பெருமிதத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்.

இந்த சிறப்புமிக்க நன்னாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று. வேற்றுமைகள் அகன்று, அன்பால் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியான வாழ்வு பெற, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கு, மீண்டும் ஒருமுறை என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.