• Sat. Oct 18th, 2025

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா.. இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Byமு.மு

Jul 29, 2024
2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா.. இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வென்கலம் வென்ற மனு பாக்கருக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 26ம் தேதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளான நேற்று பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் (வயது 22) பங்கேற்றார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மனு பாக்கர் 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வாங்கிய முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் எக்ஸ் தளத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று கொடுத்த மனுவுக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் அலுவல் தொடங்கியதுமே மனு பாக்கருக்கு வாழ்த்து கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.