• Sun. Oct 19th, 2025

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு…

Byமு.மு

Dec 19, 2023

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு.

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது. அச்செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை 20.12.2023-க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால் இப்போட்டிகளுக்கான கடைசி தேதி 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறும்படபோட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் (உதாரணமாக சமூக நீதி, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/ நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில் புதிய குறும்படங்களை (Short film) (அதிகபட்சம் 10 நிமிடங்கள்) உருவாக்கி அதனை விண்ணப்பங்களுடன் 15.01.2024 தேதிக்குள் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேபோல் சுருள்பட போட்டியில் (Reels) கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் தலைப்பில் புதிய சுருள்படங்களை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கும் வகையில் உருவாக்கி விண்ணப்பங்களுடன் 15.01.2024 தேதிக்குள் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் https://dipr.tn.gov.in (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.