• Sun. Oct 19th, 2025

சுங்கக் கட்டண உயர்வு: அன்புமணி கண்டனம்

Byமு.மு

Aug 27, 2024
ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஊர்திகளைப் பொறுத்து 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்றும், ரூபாய் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான உயர்வு மிகவும் அதிகம் ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60 சதவீதம் மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை.

நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும். லாரிகள் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். எனவே சுங்கக்கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட இல்லை. எனவே, செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.