• Sun. Oct 19th, 2025

மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Byமு.மு

Aug 29, 2024
மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 2024-25ம் ஆண்டிற்கான முதல் தவணையான ₹573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு தனது பங்குதொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது .

கண்டிக்கத்தக்கதாகும். மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். நிபந்தனைகளின் அடிப்படையில்தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தரமுடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன.

‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், ‘கல்வி உரிமைச் சட்டம்’ கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையை கருத்திற்கொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி `சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டும்.