• Sat. Oct 18th, 2025

ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம்

Byமு.மு

Aug 31, 2024
ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம்

இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் என்று அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது.

ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால் தேசிய கல்விக்கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றான் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது. பழனியில் முருகன் மாநாடு நடத்தியதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் ஒருபோதும் திமுக தலைமையிலான கூட்டணி மாறாது. அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க வெளிநாடு சென்றுள்ளார். அதனை வரவேற்கிறேன். இவ்வாறு கூறினார்.