• Wed. Dec 3rd, 2025

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்: செல்வப்பெருந்தகை

Byமு.மு

Sep 26, 2024
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் தனியார் வசூலிக்கிற தொகை யாருக்கு செல்கிறது? அதில் பயனடைபவர்கள் யார் எனத் தெரியவில்லை? தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகளின் மூலம் வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய பாஜ ஆட்சியாளர்களுக்கு பங்கு இருக்கிறது என்று குற்றச்சாட்டுகிறேன். இந்த விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் தீவிரமான போராட்டத்தை நடத்தவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.