• Sat. Oct 18th, 2025

இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா 

Byமு.மு

Sep 30, 2024
இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா 

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பூந்தமல்லியில் நேற்று மாலை 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகரத் தலைவர் பாரக் பாஷா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சலீம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட செயலாளர் நூர் முகமது, மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மாவட்ட நிர்வாகிகள் அஸ்காப், அக்பர், அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் நிருபர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் உரிமைகளை குழிதோண்டி புதைக்கக்கூடிய திட்டம். இதை தனது உரையில் முதல்வர் கூறியதை வரவேற்கிறோம்.

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த உத்தேச மசோதா குறித்து இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துகளை கூறுகிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க கூடியவர்களை தமிழக அரசு முடிவு செய்வதில்லை. நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுதான் முடிவு செய்கிறது. தமிழக எம்எல்ஏ, எம்பிக்கள், ஜமாத், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறானது என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார். இதில் பூந்தமல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், திமுக மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகரமன்ற உறுப்பினர்கள் மெஹராஜ் ஷேக் தாவூத், கவிதா சுரேஷ், ஏஎஸ்ஆர்.சுரேஷ், காஜாமைதீன், சேக்மைதீன், அசார் அகமது, ஹாஜா, பேட்டை அப்பாஸ், வசிஅகமது உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.