• Sat. Oct 18th, 2025

காலையிலேயே தெலுங்கானா மக்களை அதிர வைத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

Byமு.மு

Dec 4, 2024
காலையிலேயே தெலுங்கானா மக்களை அதிர வைத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

:இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது உணரப்பட்டு உள்ளன.இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தெலுங்கானாவில், ஐதராபாத், ஹனுமகெண்டா, கம்மம், பத்ராத்ரி, கொத்தகுடேம் மாவட்டங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆந்திராவில் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்து 250 கிமீ தூரத்தில் இருக்கும் முழுகு மாவட்டத்தை மையமாக கொண்டு இன்று காலை 7.27 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று (டிசம்பர் 4) நள்ளிரவு 12.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.