ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் பேருள்ளப் பெருந்தகைமையால் தமிழ்நாட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள்; மேல் நிலைப் பள்ளிகள்தோறும் ஏற்படுத்தப்பட்டன.
மன்றம் என்றாலே, அது தமிழுக்கான மன்றமே என்ற அறவுணர்வே பள்ளிப் பிள்ளைகளின் உள்ளத்தில் மேலோங்க வேண்டும்; தமிழ் வளர்ச்சிக்கான திருத்தொண்டர்களாக அவர்கள் தொண்டாற்றும் வாய்ப்பும் வேண்டும் என்ற பெருநோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே பள்ளிகளுக்கான தமிழ் மன்றங்கள்.
பள்ளிகள் / ஆசிரியர்கள் / மாணவர்கள் எனத் தாங்களே நிகழ்த்திவந்த தமிழ் மன்றங்கள், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நிதிநல்கையும், அரசேற்பும் பெற்றுள்ளன என்பது வரலாற்றுப் பெருமிதம் ஆகும்.
அதற்கான முன்மொழிவாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் 2022 – 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்தும் பொருட்டு அரசாணை வெளியிடப்பட்டு ரூ.5,59,62,000/- (ரூபாய் ஐந்து கோடியே ஐம்பத்தொன்பது இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு.
அப்பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்வுகளை நடத்திட 6218 பள்ளிகளில் ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- வீதம் நிதிநல்கை வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகையானது பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கு வழியாக அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பெறும்.
ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவர் அப்பள்ளியின் தலைமையாசிரியரால் நியமிக்கப்பெற்றுத் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பெற வேண்டும். மாவட்டந்தோறும் நிதிநல்கை பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
- அரியலூர் மாவட்டம் – 119 பள்ளிகள்,
- சென்னை மாவட்டம் – 162 பள்ளிகள்,
- கோயம்புத்தூர் மாவட்டம் – 197 பள்ளிகள்,
- கடலூர் மாவட்டம் – 241 பள்ளிகள்,
- தருமபுரி மாவட்டம் – 226 பள்ளிகள்,
- திண்டுக்கல் மாவட்டம் – 170 பள்ளிகள்,
- ஈரோடு மாவட்டம் – 189 பள்ளிகள்,
- காஞ்சிபுரம் மாவட்டம் – 100 பள்ளிகள்,
- கன்னியாகுமரி மாவட்டம் – 135 பள்ளிகள்,
- கரூர் மாவட்டம் – 114 பள்ளிகள்,
- கிருட்டினகிரி மாவட்டம் – 268 பள்ளிகள்,
- மதுரை மாவட்டம் – 216 பள்ளிகள்,
- நாகப்பட்டினம் மாவட்டம் – 96 பள்ளிகள்,
- நாமக்கல் மாவட்டம் – 161 பள்ளிகள்,
- பெரம்பலூர் மாவட்டம் – 92 பள்ளிகள்,
- புதுக்கோட்டை மாவட்டம் – 219 பள்ளிகள்,
- இராமநாதபுரம் மாவட்டம் – 138 பள்ளிகள்,
- சேலம் மாவட்டம் – 291 பள்ளிகள்,
- சிவகங்கை மாவட்டம் – 138 பள்ளிகள்,
- தஞ்சாவூர் மாவட்டம் – 230 பள்ளிகள்,
- நீலகிரி மாவட்டம் – 94 பள்ளிகள்,
- தேனி மாவட்டம் – 106 பள்ளிகள்,
- திருவள்ளூர் மாவட்டம் – 225 பள்ளிகள்,
- திருவாரூர் மாவட்டம் – 144 பள்ளிகள்,
- தூத்துக்குடி மாவட்டம் – 88 பள்ளிகள்,
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 224 ,
- திருநெல்வேலி மாவட்டம் – 94 பள்ளிகள்,
- திருப்பூர் மாவட்டம் – 162 பள்ளிகள்,
- திருவண்ணாமலை மாவட்டம் – 337 பள்ளிகள்,
- வேலூர் மாவட்டம் – 135 பள்ளிகள்,
- விழுப்புரம் மாவட்டம் – 236 பள்ளிகள்,
- விருதுநகர் மாவட்டம் – 190 பள்ளிகள்,
- தென்காசி மாவட்டம் – 80 பள்ளிகள்,
- கள்ளக்குறிச்சி மாவட்டம் – 146 பள்ளிகள்,
- செங்கல்பட்டு மாவட்டம் – 143 பள்ளிகள்,
- திருப்பத்தூர் மாவட்டம் – 115 பள்ளிகள்,
- இராணிப்பேட்டை மாவட்டம் – 121 பள்ளிகள்,
- மயிலாடுதுறை மாவட்டம் – 76 பள்ளிகள்
என மொத்தம் 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மன்றங்களுக்குத் தமிழ் வளர்ச்சிக்கெனப் பன்னூறு வகைகளிலும் நிலைகளிலும் பெருந்தொண்டாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த நாளின் நினைவாக “முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்” எனப் பெயர் சூட்டிப் பெயர்ப்பலகைகளில் இப்பெயரிலேயே 6218 அரசுப் பள்ளிகளிலும் குறிப்பிட வேண்டும் என்ற அரசாணைப்படி செயற்படும்படி அறிவிக்கப்படுகிறது.