• Sun. Oct 19th, 2025

படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி

Byமு.மு

Mar 5, 2024
படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி

பெண் கல்விக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பெண்களுக்காகவே பள்ளிகள், கல்லூரிகளை தொடங்கி நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்கள் உயர்கல்வி கற்க முன்வரவேண்டும். படித்த பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்காக படித்த பெண்கள் தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனில் மானியம் வழங்கப்படுகின்றது என்று முதலமைச்சர் ந. ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் புதுச்சேரி பாரதி வீதி திருவள்ளுவர் நகர் ஸ்ரீசாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெறும் 6 நாள் மகளிர் சக்தி என்ற மையக்கருத்திலான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியபோது முதலமைச்சர் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தார்.

பெண்கள் சக்தி மிகவும் முக்கியமானது. இன்று பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது  அரசியல் பங்கேற்பில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்கள் சிரமம் இல்லாமல் வாழ்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித்  தருகின்றது. குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதுவை அரசு முன்னரே  பெண்களுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளது.  இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக திகழ்கின்றனர். பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று முதலமைச்சர் ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே. பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை தலைமை வகித்தார். மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இயக்குனர் மா லீலா மீனாட்சி நோக்க உரையாற்றினார்.

 இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் செல்வி பி முத்துமீனா, அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனர் மா.லட்சுமி, மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் தா.சதீஷ்குமார் ஆகியோர் உரையாற்றினார்.

 முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் முனைவர் தி. சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவி அலுவலர் சு. வீரமணி நன்றி கூறினார்.

நேற்று கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பெண்களுக்கான சட்டங்கள் குறித்த துண்டு பிரசுரத்தையும் அவர் வெளியிட்டார். மகளிர் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் துணிப் பைகளை வழங்கினார்.

இந்த முகாமில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலத்துறை, புதுச்சேரி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகம், சட்ட சேவைகள் ஆணையம், நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம், நலவழித்துறை, இம்காப்ஸ் மருந்தகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகின்றது.