• Sun. Oct 19th, 2025

ஃபரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிய அமலாக்கத்துறை மனு

Byமு.மு

Sep 11, 2024
ஃபரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிய அமலாக்கத்துறை மனு

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான பண மோசடி வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் புதிய வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

பண மோசடி தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் குற்றப்பத்திரிகையில் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு தொடர்பாக ஃபரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்து சேர்த்தல் மற்றும் சொத்தை மறைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வரமே உள்ளது. இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.