• Sat. Oct 18th, 2025

ஒடிசா பாஜக துணை தலைவர் திடீர் ராஜினாமா!.

Byமு.மு

Apr 4, 2024
ஒடிசா பாஜ துணை தலைவர் திடீர் ராஜினாமா

ஒடிசா பாஜ துணைத் தலைவர் பிருகு பக்சிபத்ரா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் 147 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் 21 மக்களவை எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மே 13ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை என 4 கட்டங்களாக நடக்கிறது. அம்மாநிலத்தில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜ மாநில துணைத் தலைவராக இருந்தவர் பிருகு பக்சிபத்ரா. இவர் திடீரென நேற்று அந்த பதவியில் இருந்து விலகினார். பின்னர் புவனேஸ்வரில் உள்ள பிஜு ஜனதா தளத்தின் தலைமையகமான சங்கா பவனில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் பிருகு பக்சிபத்ரா இணைந்தார். அவரை, அக்கட்சியின் பெர்ஹாம்பூர் மக்களவை எம்.பி., சந்திரசேகர் சாகு வரவேற்றார். பிஜு ஜனதா தளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏ, பிரதீப் பானிக்கிரகி பாஜவில் இணைந்தார். அவருக்கு, பெர்ஹாம்பூர் தொகுதியில் பாஜ தலைமை சீட் வழங்கியது.

இதை தொடர்ந்து, பக்சிபத்ரா பாஜவில் இருந்து விலகி பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளார். இவருக்கு பெர்ஹாம்பூர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் சீட் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில், 15 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. பெர்ஹாம்பூர், போலங்கீர், பர்ஹார், கியோஞ்ஹர், பத்ராக், பாலசூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.