திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை
“இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் இந்த ஆண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி”
“பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலுவான மற்றும் முதிர்ச்சியான அடித்தளத்தில் தொடங்கப்பட்டது”
“எந்தவொரு நாட்டிற்கும் வழிகாட்டுவதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன”
“நமது தேசமும் அதன் நாகரிகமும் எப்போதும் அறிவை மையமாகக் கொண்டவை”
“நமது வரலாற்றில் 2047-ம் ஆண்டு வரையிலான வருடங்களை மிக முக்கியமானதாக மாற்றுவதற்கான இளைஞர்களின் திறனில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்”
“இளமை என்றால் ஆற்றல், அதாவது வேகம், திறமை மற்றும் அதிக அளவில் வேலை செய்யும் திறன்”
“ஒவ்வொரு உலகளாவிய தீர்வின் ஒரு பகுதியாக இந்தியா வரவேற்கப்படுகிறது”
“உள்ளூர் மற்றும் உலகளாவிய காரணிகள் உள்ளிட்ட பல வழிகளில், இந்தியாவில் இளைஞராக இருப்பதற்கு இது உகந்த நேரம்”திருச்சிராப்பள்ளியில் இன்று நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மேலும், பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், 2024 புத்தாண்டில் தனது முதல் பொது நிகழ்ச்சி இது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அழகான மாநிலமான தமிழ்நாட்டில், இளைஞர்கள் மத்தியில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றதாக பெருமையுடன் கூறிய பிரதமர் மோடி, பட்டம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது பொதுவாக ஒரு சட்ட அவையின் செயல்முறையாகும், படிப்படியாக புதிய கல்லூரிகள் இணைக்கப்பட்டு பல்கலைக்கழகம் வளர்கிறது, இருப்பினும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டது, ஏனெனில் தற்போதுள்ள பல புகழ்பெற்ற கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தை பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகின்றன. வலுவான மற்றும் முதிர்ச்சியான அடித்தளத்தையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

“நமது தேசமும், அதன் நாகரிகமும் எப்போதும் அறிவை மையமாகக் கொண்டுள்ளன” என்ற பிரதமர், நாளந்தா மற்றும் தக்ஷிலாவின் பண்டைய பல்கலைக்கழகங்களைச் சுட்டிக்காட்டினார்.
காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை ஆகிய இடங்களில் சிறந்த பல்கலைக் கழகங்கள் இருந்ததாகக்கூறிய அவர், அவற்றுக்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் அடிக்கடி வருகை புரிந்ததாகவும் குறிப்பிட்டார்.
பட்டமளிப்பு விழா என்ற கருத்தாக்கம் தொன்மையானது என்று கூறிய பிரதமர், படைப்புகளுக்கு ஒரு பெரிய சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்கும் வகையில், கவிஞர்களும் அறிவுஜீவிகளும் கவிதையையும் இலக்கியத்தையும் பகுப்பாய்வுக்காக தமிழ் சங்கத்தில் வழங்கியதை எடுத்துக்காட்டினார்.
இந்தத் தர்க்கம் இன்றும் கல்வி மற்றும் உயர்கல்வியில் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் கூறினார். “இளம் மாணவர்கள் அறிவின் சிறந்த வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்”, என்று அவர் மேலும் கூறினார்.
தேசத்தை வழிநடத்துவதில் பல்கலைக்கழகங்களின் பங்கு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், துடிப்பான பல்கலைக்கழகங்கள் இருந்ததால் தேசமும், நாகரிகமும் எவ்வாறு துடிப்பாக இருந்தன என்பதை நினைவு கூர்ந்தார். நாடு தாக்குதலுக்கு உள்ளான போது நாட்டின் அறிவு முறைமை இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகாத்மா காந்தி, பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் சர் அண்ணாமலை செட்டியார் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழகங்களைத் தொடங்கினர், அவை சுதந்திரப் போராட்டத்தின் போது அறிவு மற்றும் தேசியவாதத்தின் மையங்களாக மாறின என்பதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தியாவின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்களின் எழுச்சியும் ஒரு காரணம் என்று பிரதமர் கூறினார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருவதாகவும், வேகமாக வளர்ந்து வரும் 5-வது பெரிய பொருளாதாரமாக திகழ்வதாகவும், இந்திய பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் சாதனை எண்ணிக்கையில் முத்திரை பதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கல்வியின் நோக்கம் குறித்தும், அறிஞர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பது குறித்தும் ஆழமாகச் சிந்திக்குமாறு இளம் அறிஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டி, கல்வி எவ்வாறு எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ நமக்குக் கற்பிக்கிறது என்பதைப் பற்றி அவர் விளக்கினார்.
மாணவர்களை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதில் ஒட்டுமொத்த சமூகமும் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், அவர்களுக்கு இந்தச் சமூகத்திற்கு திருப்பிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், ஒரு சிறந்த சமூகத்தையும் நாட்டையும் உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.

2047ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வரும் ஆண்டுகளை நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாக மாற்றுவதற்கான இளைஞர்களின் திறன் குறித்து பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘தைரியமான புதிய உலகை உருவாக்குவோம்’ என்ற பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்கள் ஏற்கனவே அத்தகைய உலகை உருவாக்கி வருகின்றனர் என்றார்.
தொற்று நோய்களின் போது தடுப்பூசிகளை உருவாக்குவதிலும், சந்திரயான் திட்டத்திலும் இளம் இந்தியர்களின் பங்களிப்பு,முக்கியமானது என்று கூறிய அவர், 2014-ம் ஆண்டில் 4000 ஆக இருந்த காப்புரிமைகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 50,000 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மானுடவியல் அறிஞர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவைப் பற்றி காட்சிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், கலைஞர்களின் சாதனைகளை எடுத்துரைத்தார். “ஒவ்வொரு துறையிலும் எல்லோரும் உங்களை புதிய நம்பிக்கையுடன் பார்க்கும் போது நீங்கள் அந்த உலகில் நுழைகிறீர்கள்”, என்று அவர் கூறினார்.
“இளமை என்றால் ஆற்றல். இது வேகம், திறன் மற்றும் அதிக அளவோடு வேலை செய்யும் திறனைக் குறிக்கிறது”, என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் அதே வேகம் மற்றும் அளவுடன் மாணவர்களை ஈடுபடுத்த அரசு செயல்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து கிட்டத்தட்ட 150 ஆக இரட்டிப்பாக்கப்பட்டது, அனைத்து முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை இரட்டிப்பாக்கியது, நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்தின் வேகம் மற்றும் அளவு இரட்டிப்பாக்கப்பட்டது. ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2014-ல் 100-க்கும் குறைவாக இருந்து கிட்டத்தட்ட 1 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் பட்டியலிட்டார்.
முக்கியமான பொருளாதாரங்களுடன் இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளைத் திறப்பது குறித்தும், அதே நேரத்தில் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார்.
ஜி20 போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரிய பங்கு வகிப்பது போன்ற ஒவ்வொரு உலகளாவிய தீர்வின் ஒரு பகுதியாக இந்தியா வரவேற்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
” உள்ளூர் மற்றும் உலகளாவிய காரணிகள் உள்ளிட்ட பல வழிகளில், இந்தியாவில் இளைஞராக இருப்பதற்கு இது உகந்த நேரம்” என்று கூறிய மோடி, இந்த நேரத்தைப் பயன்படுத்தி நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லுமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பயணம் இன்றுடன் முடிவடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கற்றல் பயணத்திற்கு முடிவே இல்லை என்று கூறினார்.
“வாழ்க்கை இனி உங்களை ஆசிரியராக மாற்றும்”, என்று அவர் கூறினார். தொடர்ச்சியான கற்றல் உணர்வில் கற்றல், மறுதிறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் முனைப்புடன் செயல்படுவது முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். “வேகமாக மாறிவரும் உலகில், நீங்கள் மாற்றத்தை இயக்குகிறீர்கள் அல்லது மாற்றம் உங்களை இயக்குகிறது” என்று கூறிய பிரதமர் மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும், பாரதிதாசன் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் முனைவர் மு.செல்வம், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.