நேரு யுவ கேந்திரா, சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்துடன் இணைந்து தேசிய இளைஞர் திருவிழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இன்று (12.01.2024) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம், நேரு யுவ கேந்திரா மாநில இயக்குனர் குன்அகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினர்.
சிறப்பு விருந்தினர் சண்முகசுந்தரம் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். மேலும், ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடித்து வருகிறோம் என்றார். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில்தான் விபத்துகள் அதிகமாக நடப்பதாகவும், இதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலித்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா போன்ற நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 76% விபத்துகளில் 80% இறப்புகள் ஏற்படுவதாக அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 38% பேர் 18-33 வயதிற்குட்பட்ட இளைஞர்களே ஆவர். எனவே, சாலை பாதுகாப்பு குறித்து இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிப்பது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் 6800 பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு மன்றம் இருக்கிறது. இதே போன்று கல்லூரிகளிலும் மன்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார். மேலும், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 2015 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாகனங்களை சாலையில் பாதுகாப்பாக இயக்க வேண்டும் எனவும், தற்போது 20 தானியங்கி வாகன தரப் பரிசோதனை மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளதெனவும் அவர் தெரிவித்தார். 10750 காலாவதியான அரசு வாகனங்கள் வாகன அழிப்பு கொள்கையின்படி அழிக்கப்பட்டுள்ளன எனவும், இதே போன்று 15 ஆண்டுகளுக்கு பிறகு வாகனங்களை தரப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நேரு யுவ கேந்திரா மாநில இயக்குனர் குன்அகமது தொடங்கி வைத்தார்.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாநில அலுவலர் செந்தில்குமார், குருநானக் கல்லூரி முதல்வர் திருமதி. அவ்வை கோதை, நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரு யுவகேந்திரா சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
8J34.jpg)
IB4P.jpg)
CEKW.jpg)