• Sat. Oct 18th, 2025

சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை!

Byமு.மு

Jan 30, 2024
செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை

சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார் இப்பள்ளியில் ஜூலை 2024-ல் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க  சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்திருப்பதாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி-யி ன் சிறந்த முன்னாள் மாணவரான வாத்வானி, ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனராவார்.

சுனில் வாத்வானி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் இடையே ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் இன்று (30 ஜனவரி 2024) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகளவில்  சிறந்தசெயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளில் ஒன்றாக தரத்தை உயர்த்துவதுடன், தரவு அறிவியல் மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் தொடர்பாக அரசின் கொள்கை வகுப்போருக்கு ஆலோசனை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இத்தகைய பள்ளியின் அவசியம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நான்காம் தொழிற்புரட்சியில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை முக்கிய நகர்வுகள் என்பதால், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தேவை மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு ஐஐடி மெட்ராஸ் இந்த உயர்தரப் பள்ளியைத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ‘பொறுப்பான செயற்கை நுண்ணறிவு’ உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஏறத்தாழ ரூ.110 கோடி தாராள நன்கொடை அளித்ததற்காக சுனில் வாத்வானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் பேசிய சுனில் வாத்வானி, செயற்கை நுண்ணறிவு, சமூகத் தாக்கம் ஆகிய இரண்டுமே எனக்கு முக்கியமானவை. முன்னாள் மாணவர் என்ற முறையில் எனது கல்வி நிறுவனத்திற்குப் பங்களிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் பிரத்யேக தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளிக்கு வலுவான தேவை இருப்பதாகக் கருதுகிறேன். அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இந்தியா அபரிமிதமான ஆற்றலைப் பெற்றிருப்பதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் உலகத் தலைவராக திகழ முடியும். பெருமைக்குரிய முன்னாள் மாணவராக, ஐஐடி மெட்ராஸ் எனது வாழ்க்கையில் சிறந்ததொரு இடத்தை வழங்கியுள்ளது. அவர்களுடன் இதுபோன்று இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் வழங்கப்படும் படிப்புகள் வருமாறு:

  • செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் பிடெக்
  • தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்டெக்
  • தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்எஸ் & பிஎச்டி
  • தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன்  இணை எம்.எஸ்சி
  • தரவு அறிவியலில் சர்வதேச பல்துறை முதுநிலைப் பாடத்திட்டம்
  • தரவு அறிவியலில் பல்துறை இரட்டைப் பட்டம்
  • தொழில்துறை செயற்கை நுண்ணறிவில் இணையதளம் சார்ந்த எம்டெக்

இதற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 2024-ல் தொடங்கும். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இணை எம்எஸ்சி பாடத்திட்டம் 30 மாணவர் சேர்க்கையுடன் தொடங்கப்படும். சர்வதேச பல்துறை முதுநிலை பாடத்திட்டமும் இப்பள்ளியில் இடம்பெறும்.

வாத்வானியின் தாராளப் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொறுப்புள்ள செயற்கைத் தொழில்நுட்பம் உலகளவிலான பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. இதன் விளைவாக, இப்பள்ளி விரைவிலேயே உலக அரங்கில் முத்திரை பதிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதன் இலக்குகள் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டும் இயல்பாகவே பல்துறைக் களங்களாகும். டொமைன் வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்கி, ஏற்கனவே உள்ள அணுகுமுறைகளுடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் தீர்வுகள் உருவாக்கப்படும். மாணவர்களுக்கு முக்கிய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள், தரவு சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை கடைபிடிக்கும் பல்துறை வடிவமைப்பு போன்றவை எங்களது பல்வேறு பட்டப்படிப்புகளில் கற்பிக்கப்படும். தொழில் வல்லுநர்கள், சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டார்.

முன்னணி கல்வி நிறுவனங்கள், அவற்றின் முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனக் கூட்டாளர்களுக்கு இடையே வலுவான பணி உறவு இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமைச் செயல் அதிகாரி கவிராஜ் நாயர், ஆராய்ச்சிகளுக்கு முன்னாள் மாணவர்கள் அளிக்கும் கொடையானது உலகம் முழுமைக்கும் அறிவு விதைகளை விதைப்பதைப் போன்றதாகும். இத்தகைய ஆதரவு வாயிலாக நமது முன்னாள் மாணவர்கள், கடந்த காலத்தை மதிப்பதுடன் எதிர்காலத்திற்கும் முதலீடு செய்கின்றனர். அவர்களின் பங்களிப்பு சிறந்த நோக்கத்திற்கு ஊக்கமளிக்கிறது. அத்துடன் ஐஐடி மெட்ராஸ்-ஐ புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஒளிவிளக்காக மாற்றுவதுடன், நல்லதொரு மாற்றத்திற்கான ஊக்கசக்தியாகவும் திகழச் செய்கிறது என்றார்.

விரிவான பல்துறை ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஐஐடி மெட்ராஸ் முன்னிலை வகிக்கும். முக்கிய அடிப்படை ஆராய்ச்சியையும், பயன்பாட்டு ஆராய்ச்சியையும் இந்த புதிய பள்ளி ஒருங்கிணைக்கும்.

இப்பள்ளியின் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான பகுதிகள் வருமாறு:

Ø சுகாதாரம்

Ø வேளாண்மை

Ø ஸ்மார்ட் நகரங்கள்- போக்குவரத்து

Ø நிதிப் பகுப்பாய்வு

Ø உற்பத்தி

Ø எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல்

Ø பாதுகாப்பு

Ø கல்வி

Ø தொகுப்பியக்க உயிரியல்