• Wed. Oct 22nd, 2025

பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Byமு.மு

Feb 7, 2024
பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கான அரசின் நோக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதில் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக சூரிய சக்தி, காற்றாலை போன்ற பிற செயல் முறைகளுடன் இணைந்து பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது குறித்து புதுதில்லியில் நேற்று (06.02.2024) நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமை வகித்தார்.  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின்சார அமைச்சகம், தேசிய அனல்மின் கழகம், மத்திய மின்சார ஆணையம், தேசிய சூரிய எரிசக்திக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

24 மணி நேர மின்சாரம் மற்றும் உச்ச மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சேமிப்பு ஊடகமாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் விரிவான விவாதங்களை நடத்தினர். இதுபோன்ற திட்டங்களுக்கு அரசின் ஆதரவை வழங்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்துறை பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், தற்போதைய மற்றும் எதிர்கால சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்ட வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு மத்திய மின்துறை அமைச்சர்  ஆர் கே  சிங், அதிகாரிகளை அறிவுறுத்தினார்.