• Sat. Oct 18th, 2025

ஃபாசிச பாஜக’வின் வெகுமக்கள் விரோத ‘கும்பலாட்சியைத்’ தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு!

Byமு.மு

Feb 1, 2024
கும்பலாட்சியைத்' தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு

மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும்; பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

“வெல்லும் சனநாயக மாநாடு” திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடந்தேறியது. நல்லோர் பலரும் மெச்சும் வகையில் ; நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்; நாசகாரக் கொள்கைப்பகை நடுங்கும் வகையில்; சிறுத்தைகளின் அடுத்தப் பாய்ச்சல் சிறப்புற அரங்கேறியது.

பல இலட்சம் பேரா? பத்து இலட்சம் பேரா? அதனை விடவும் மேலா? என சிறுகனூரில் குவிந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து பலரும் வியந்து பலவகையிலும் புகழ்ந்து பல்வேறு யூகங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பரபரப்பூட்டும் ஒரு மாபெரும் உரையாடலை உருவாக்கி அரசியல் அரங்கை அதிரவைத்துள்ளது இம்மாநாடு!

இந்த மாபெரும் மக்கள் திரட்சி எப்படி நிகழ்ந்தது? இவர்கள் இத்தனைக் காலமும் எங்கே இருந்தார்கள்? எதற்காக இப்படி அணி அணியாய்த் திரண்டார்கள்?

இது என்ன ஒரு கட்சி நடத்திய அரசியல் மாநாடா? அல்லது கடைகோடி மாந்தர்களும் கட்டுச் சோற்றுடன் வந்து களிப்புற பங்கேற்றக் கலாச்சாரக் கொண்டாட்டமா?
வைகை நதியில் வந்து கலக்கும் மக்கள் நதியென்னும் மதுரை கள்ளழகர் பெருவிழாவா? திருவண்ணாமலை நகரையே திணற வைக்கும் தீபமென்னும் திருச்சுடர் ஒளிரும் திருவிழாவா? காவிரி நதியின் கரையோரத்தில் மக்கள் கோலாகலமாய்க் கூடிமகிழும் ஆடிப்பெருக்கின் அணிவகுப்பா?

இவ்வாறு சிறுத்தைகளின் சீரார்ந்த பேரெழுச்சியைக் கண்ட பெரியோர் பலரும் அதனை உவப்பூட்டும் பெருவிழா ஒன்றுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் மாநாடு!

இது, அவரவர் செலவில் குடும்பம் குடும்பமாய் ஆர்த்தெழுந்த கோட்பாட்டுப் படையெடுப்பு! ஊரெங்கிலும், நாடெங்கிலும் திரும்பும் திசையெல்லாம் சிறுத்தைகளின் மாநாட்டு விளம்பரம். முகாம் ஒன்றுக்குக் குறைந்தது மூன்று வண்டிகள். ஒவ்வொரு வண்டியிலும் ஊரிலேயே சமைத்த எளிய உணவு மற்றும் குடிநீர் என தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய வரலாறு படைத்த சிறுத்தைகளின் பேருழைப்பு.

என் வேண்டுகோளையேற்று இரவு பகலென பெரும்பாடுபட்டு இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறேன்? செய்வதறியாது உள்ளம் நெகிழ்ந்தும் உணர்ச்சிகளால் உறைந்தும் கிடக்கிறேன்.

காலம் காலமாய்ச் சிதறடிக்கப்பட்ட மக்கள் இன்று கருத்தியல் அடிப்படையில் அரசியல் படுத்தப்பட்டிருப்பதையும்; அவர்கள் அமைப்பாக்கப் பட்டிருப்பதையும்; ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக எழுச்சிப் பெற்றிருப்பதையும் இம்மாநாடு உணர்த்துகிறது.

இம்மாநாட்டில், இலட்சம் இலட்சமென அலை அலையாய் திரண்டாலும்; எண்பது விழுக்காடு அளவில், முப்பது வயதுக்குட்பட்ட புதிய இளந் தலைமுறையினர் ஒரே இடத்தில் குழுமியிருந்தாலும்; ஓங்கி உரத்துப் போர்க்குரல் எழுப்பினாலும்; மாநாட்டில் என்னே இராணுவக் கட்டுப்பாடு? என்னே எழுச்சிமிகு பேரொழுங்கு?

நண்பகலில் வந்து நள்ளிரவு வரையில் பத்துமணி நேரம் தொடர்ந்து படைவீரரன்ன மிகுந்த கட்டுப்பாடாய்க் காத்திருந்து மாநாட்டின் செழுமைமிகு நோக்கங்களைச் சிறப்புறச் செய்த கருஞ்சிறுத்தைகளின் கருத்தியல் முதிர்ச்சியை என்னென்பது? எங்ஙனம் விவரிப்பது?

இது, சாதி வெறியூட்டி; மத வெறியூட்டி; பிற சாதி- மதங்களுக்கு எதிரான வெறுப்பினையூட்டி, மாய்மால அரசியல் வித்தைகளின் மூலம் மயக்கமூட்டி, உழைத்துப் பிழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் நோக்கில் அள்ளிவரப் பெற்ற அப்பாவிக் கூட்டமல்ல!

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகிய மாமனிதர்களின் மகத்தான கொள்கை – கோட்பாடுகளை விதைத்ததன்மூலம், கடந்த முப்பதாண்டுகளில் முற்போக்கு சக்திகளாய் முதிர்ச்சியடைந்து, அரசியல் தெளிவுடன் ஆர்ப்பரிக்கும் ஆவேச சிறுத்தைகள்!

இது, தேர்தல் பேரத்திற்காகத் திரட்டப்பட்டதல்ல; தேசத்தைப் பாதுகாப்பதற்காக தாமே வெகுண்டெழுந்த மாபெரும் மக்கள் எழுச்சி! கொள்கைப் பகையெதிர்த்து குமுறி வெடித்தெழுந்த விடுதலைச் சிறுத்தைகளின் சனநாயகப் புரட்சி!

இந்தியாவைச் சூழ்ந்துள்ள சங்பரிவார்களின் சனாதனக் கொள்கைப் பேரிடரிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், மக்களுக்கான நாடாளுமன்ற சனநாயகக் கோட்பாடுகளையும் பாதுகாத்திடும் வகையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்த மாபெரும் அறப்போர் தான் சிறுத்தைகளின் இந்த “வெல்லும் சனநாயகம் மாநாடு” !

ஒருபுறம் வலதுசாரி – பிற்போக்கு சங்பரிவார்களின் ‘சனாதனம்’! இன்னொருபுறம் இடதுசாரி – முற்போக்கு சக்திகளின் ‘சனநாயகம்’!

இவ்விரு கோட்பாடுகளுக்குமிடையே தொடர்ந்து நடைபெறும் நீண்டதொரு போரின் இறுதியில் “சனநாயகமே வெல்லும்” என்பதை, ஊருக்கு- உலகுக்கு உரத்தும் சொல்லும் சிறுத்தைகளின் அரசியல் அறச் சீற்றம்தான் இம்மாநாடு!

இதில் சாதிப் பெருமை கூச்சல் இல்லை! ஆண்டப் பரம்பரைப் பிதற்றல் இல்லை! மதம் மற்றும் கடவுளின் பெயரால் மக்களை ஏய்க்கும் மாயாவாத முழக்கங்கள் இல்லை!

“ஒரே நாடு- ஒரே மதம்- ஒரே மொழி- ஒரே கலாச்சாரம் – ஒரே கட்சி- ஒரே ஆட்சி” என அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுள் ஒன்றான
‘பன்மைத்துவத்துக்கு’ நேரெதிரான ஃபாசிசத்தைப் பரப்பும் பசப்புரைகள் இல்லை!

வெல்லும் சனநாயகம்!
வெல்லும் இந்தியா! – என்னும் வெற்றி முழக்கமே வீரியமாய் ஒலித்தது! ஃபாசிச பாஜக அரசின் வெகுமக்கள் விரோதக் கொள்கைகளான

  • சனாதனமயமாதல்;
  • கார்ப்பரேட்மயமாதல்,
  • ஃபாசிசமயமாதல்
  • ஆகிய ‘சங்கத்துவ அரசியலை வீழ்த்துவோம்’ என்கிற சனநாயக முழக்கங்களே விண்ணதிர ஒலித்தன!

புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுத்த அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் அறப்போருக்கான அறைகூவலே அனைத்துக்கட்சித் தலைவர்களின் உரைகளிலும் அனலாய் தெறித்தது. தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் மக்கள் விடுதலைக்கான அரசியல் சிந்தனைகள்தாம் மாநாடு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்தது.

இம்மாநாடு, ‘மோடி – அதானி’யின் ‘சனாதன – கார்ப்பரேட்’ அரசுக்கு முற்றிலும் எதிரானது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தது. ஃபாசிச பாஜக’வின் வெகுமக்கள் விரோத ‘கும்பலாட்சியைத்’ தூக்கி எறிந்திட கொள்கை சார்ந்து சூளுரைத்தது. எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா கூட்டணியை’ வெற்றிபெற செய்திட உறுதியேற்றது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிறுத்தைகளின் புரட்சிகர மாநாட்டை வெற்றிபெற செய்த என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும்; மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றி எமக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாடு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர் பெருமக்கள் யாவருக்கும்; பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்தல் என முழுமையான ஒத்துழைப்பை நல்கிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்வுடன் உரித்தாக்குகிறேன்.

மேலும், மாநாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் விருத்தாசலம் அருகே விபத்திலே சிக்கி உயிரிழந்த கடலூர் மாவட்டத் தம்பிகள் வில்லியநல்லூர் உத்திரக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகிய மூவருக்கும் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துவதோடு, அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.…


  • ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் விதமாக, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை சமூக நலத் துறையின் கீழ்…


  • கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர் இயேசு பெருமான். இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அனைத்து மதம், மொழி பேசுவோரும், நல்லிணக்கத்தோடும் சமஉரிமையோடும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழும், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் முதலிய பல நலதிட்டங்களை செய்து வருகிறோம். ஏராளமான கிறிஸ்தவ கல்வி…