• Sat. Oct 18th, 2025

’நீட் எழுதாமலே எடப்பாடி ஆட்சியில் 5000 டாக்டர்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

Byமு.மு

Oct 17, 2024
நீட் எழுதாமல் எடப்பாடி ஆட்சியில் 5000 டாக்டர்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாநகர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘எடப்பாடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கூட கேட்காத போது 7.5 சதவீதம் திட்டத்தை கொண்டு வந்து நம்மை போல் ஏழைகள், நடுத்தர வீட்டுப் பிள்ளைகள் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றால், அதற்குரிய மதிப்பெண் பெற்றிருந்தால் நீட் தேர்வு எழுத வேண்டியது இல்லை. அவர்கள் நேரடியாக டாக்டர் ஆகி எம்பிபிஎஸ் படிக்கலாம் என உத்தரவு போடப்பட்டது. இதனால் ஐந்தாவது வருடத்தில் 5,000 பேர் இலவசமாக டாக்டர் ஆகியுள்ளனர். இது எடப்பாடியாரின் சாதனை’’ என்று கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, திட்டம் என கூறியது மட்டுமல்லாமல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதாமல் 5,000 பேர் டாக்டரானதாக முன்னாள் அமைச்சரே பேசியது, அங்கிருந்த கட்சித் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது உளறல் பேச்சை கேட்டு, ‘மக்கள் கேட்டால் என்ன நினைப்பார்கள்…’ என்று அக்கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர்.