• Sat. Oct 18th, 2025

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Byமு.மு

Aug 30, 2024
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

 முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், சமமான மற்றும் தரமான கல்வியை அளிப்பதையும், வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒன்றிய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்ற திட்டமாக சமக்ரா சிக்ஷா திட்டம் விளங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 60 விழுக்காடு பங்கான 2,152 கோடி ரூபாயினை ஒன்றிய அரசு அளிக்க வேண்டுமென்றும், இதற்கான கருத்துரு ஏப்ரல் 2024 ஆம் ஆண்டிலேயே ஒன்றிய அரசுக்கு அனுப்பியும், முதல் தவணையான 573 கோடி ரூபாய் இன்னும் ஒன்றிய அரசால் விடுவிக்கப்படவில்லை என்றும், இது தவிர முந்தைய ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய 249 கோடி ரூபாயும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததற்கு காரணம், தேசியக் கல்விக் கொள்கையின்கீழ் வரும் பி.எம். ஸ்ரீ பள்ளிகளை திறக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது, நடைமுறையில் உள்ள சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியைப் பெற வேண்டுமானால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு புதிய நிபந்தனையை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக அளிக்க ஒன்றிய அரசு முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.