• Sat. Oct 18th, 2025

மலையாள சினிமா பாலியல் விவகாரம் ‘நீதி கிடைக்க வேண்டும்’- திருமாவளவன் பேட்டி

Byமு.மு

Aug 30, 2024
மலையாள சினிமா பாலியல் விவகாரம் 'நீதி கிடைக்க வேண்டும்'- திருமாவளவன் பேட்டி

மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்தில், பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு, திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தனியார் நிலம் வழியாக சென்றனர். அப்போது, தனியார் நிலத்தை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியினர் சேதப்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தன் நிலத்தை சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருமாவளவன் உள்ளிட்ட, 14 பேர் மீது, வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததை தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து, நிருபர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2012ம் ஆண்டு, நினைவஞ்சலி செலுத்த சென்ற பொழுது காவல்துறையினர் பொய் வழக்கு புனைந்தார்கள். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நான் உட்பட 14 பேர் நேரில் ஆஜராகினோம். முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஆயிரக்கணக்கான தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.‌ அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். மலையாள சினிமாவில் நடிகர்களின் பாதுகாப்புக்காக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.

அதில் தற்பொழுது பாலியல் சீண்டல் குறித்த புகார் எழுந்துள்ளது‌. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்ற போர் குரல் நியாயமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ் சினிமா இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாக தெரியவில்லை, எனவே அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.