• Sun. Oct 19th, 2025

திமுகவுடன் தான் கூட்டணி: திருமாவளவன் திட்டவட்டம்

Byமு.மு

Sep 12, 2024
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 23 அன்று ஆர்ப்பாட்டம்

‘மாநாட்டை அரசியலுடன் முடிச்சு போட வேண்டாம். திமுகவுடன் தான் கூட்டணி’ என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இமானுவேல் சேகரன் 67ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது.

கட்சி வேறு, அரசியல் என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி அரசியல் சார்ந்து இருக்க முடியாது. தேர்தல் நேரங்களில் அரசியலைப் பார்த்துக் கொண்டு மற்ற நேரங்களில் மக்கள் நலனை பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுகவுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் கருத்து. அதிமுக, இடதுசாரிகளுக்கும் அதே நிலைபாடு தான். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும், இதற்கும் முடிச்சு போடத் தேவையில்லை. அரசியலோடு, தேர்தலோடு இணைத்துப் பார்ப்பது கூட்டணி கணக்குகளை வைத்து பார்க்கிறார்கள். கூட்டணியை விட்டு தாவவில்லை.

அதிமுக மதுக்கடையை மூட வேண்டும் என்று நினைத்தால் மேடைக்கு வரட்டும். வந்து பேசட்டும். இதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை கிடையாது. பாஜ, பாமகவுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.